September 21, 2010

சிறிய இடைவெளிக்குப் பின்...

இரண்டு வாரமாக வலைப்பக்கம் வரமுடியாத நிலை. கடந்த 5 ந்தேதி மெதுவாக எட்டிப் பார்த்த ஜூரம் அடுத்து வந்த நாட்களில், டைய்பாய்டில் கொண்டு விட்டது. எதை சாப்பிட்டாலும் கசப்பு, எருமைமாடுகளுக்கு கொடுப்பது போல் எவ்வளவு பெரிய மாத்திரைகள். பதிவுலககமே நாம் எங்கே என்று தேடி??? மாய்ந்துபோனது???!!!! (ஜூரம் அதனால 1 வாரம் கழித்து வரேனு மெயில் அனுப்புனா, அங்கயும் கும்மியடிச்சி, கொலையா கொல்றானுக...நாதாரிக, மொள்ளமாரிங்க, முடுச்சவிக்கிக...).

சரி ஜுரம் சரியாகிடுச்சி ஒரு பதிவு போடலாம்னா, 2 வாரமா ஆஃபீஸ் போகாததால, தோட்டத்துல களை முளைச்சிருக்குறா மாதிரி அஃபீஸ்ல ஆணி பெருகி நிக்குது. இந்தமாசம், இன்கம்டாக்ஸ் + ROC க்கு, கம்பனி அக்கவுண்ட்ஸ் ஃபைல் பண்ணனும் அதுவேற. அதனால அடுத்த ரெண்டுவாரத்துக்கு பதிவு ஏதும் எழுதமுடியுமானு தெரியலை (ங்கொய்யாலே எப்ப நீ பதிவெழுதுவேனு, நாலு பேர் காத்திட்டு இருக்குறாமாறியே பில்டப்பு).

கடந்த வாரங்களில் என் மனதுக்கு சந்தோசமான + மிகவும் துக்ககரமான நிகழ்வுகள் என் வாழ்வில்.

சந்தோசமான நிகழ்வுகள் :  

1.    என் பொண்ணு பள்ளியில் (L K G), கதை சொல்லுவதிலும்( story telling with action), ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டியிலும் ( character from Ramayana. we have chosen, sita for her) முதலாவதாக வந்தது. 3 வாரப் பரபரப்பான preparation ஒரு வழியாக முடிந்தது. எந்த கேரக்டர் தேர்ந்தெடுப்பது, அதற்கான வசனங்கள், பொறுத்தமான உடைகள் மற்றும் மேக்கப், சார்ட் பேப்பர், மற்றும் பெயிண்ட்+பிரஸ் வாங்கி வந்து தீ மாதிரியான வரைபடம் வரைதல் என்று அதற்காக ஒருவாரம்,  வீட்டம்மா என்னையும் பெண்டு நிமிர்த்தியாகிவிட்டது. இருந்தாலும் குழந்தக்காக கஷ்டப்படுவதில்??? ஒரு சுகம். அதுவும் முடிவில் போட்டியில் முதலாவதாக வந்தால் ரெட்டிப்பு சந்தோசம்.

2. எனது ”சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு” பதிவு செப்டெம்பர் மாத, மல்லிகை மாத இதழில் வெளிவந்துள்ளது, எனக்கு ஒரு பிரதியை அனுப்பி இருந்தார்கள். முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ஒரு தமிழ்மாத இதலில் என்னுடையப் பெயர், மனதிற்குள் சின்ன சந்தோசம்.
சோகமான நிகழ்வு :-

  என் வாழ்வின் மிக நெருங்கிய தோழனின் மறைவு.  நினைவு தெரிந்து கிராமத்தில் ஒன்றாகவே சுற்றித்திருந்திரிந்திருக்கிறோம், பத்தாவது வரையிலும் ஒன்றாகவே படித்தோம், மீண்டும் கல்லூரி செல்லும் போது அதே கல்லூரியில் எனக்கு ஜுனியராக சேர்ந்தாலும் ஒன்றாகவே இருந்தோம். கல்லூரி படிப்பு முடிந்து அவன் விவசாயம் பார்க்க கிராமத்திலேயே இருந்துவிட்டான். நான் ஊர் செல்லும் போது கூடிப் பேசுவது என்றாகிவிட்ட காலங்கள். ஊரிலிருந்து போன், ஜெயராமன் இறந்துவிட்டான் என்று, மனதே ஸ்தம்பித்துபோய்விட்டது. என் தந்தையின் இழப்பின் போது மனதினுள் உணர்ந்த ஒரு வெற்றிடத்தை, மீண்டும் உணர்ந்தேன்.

காலையில் போன் மாலையில் எடுத்துவிடுவோம் என்று, உடனே கிளம்பினாலும் ஊர் போய் சேர இரவாகிவிடும், வீட்டிலும், இப்போதுதான், டைபாய்ட் ஜூரம் சரியாகிருக்கு, எப்படி இருந்தாலும் நேரத்திற்கு போய் சேரமுடியாது, 2 நாள் கழித்து செல்லுங்கள் , இல்லையென்றால் காரியத்திற்கு செல்லுங்கள் என்று (போனில் பதிவர் மங்குனியும் இதையே சொன்னான்). முடிவில் அவனது முகத்தை பார்க்கமுடியாமல் போய்விட்டது. பணம் தேடி கிராமத்தை விட்டு செல்பவர்களின் ஈடுகட்ட முடியாத துரங்களில் இதுமாதிரியானதும் ஒன்று.

பட்டணத்தில் இருந்திருந்தால், அவனின் உடல் நலத்தினை ( ஜூரம் ஆரம்பித்து அது நிமோனியா காய்ச்சல் என்று கண்டரியப்பட்டு, மதுரை அப்போலாவில் 10 நாள் சிகிச்சை பலனின்றி இறப்பு) சரி செய்திருக்கலாமோ என்ற எண்ணம். இன்னும் மருத்துவ ஆராய்ச்சிகள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் போலும். எனது மொத்த வாழ்நாளில் மறக்க முடியாத இழப்புகளில், இவனது மறைவும் ஒன்று.(இதை இங்கு எழுதலாமா வேண்டாம என்று மனதிற்குள் சிறு போராட்டம், முடிவில் உற்றவர்களிடம் பேசி பாரத்தை கொஞ்சம் இறக்கிவப்பதுபோன்ற உணர்வில் எழுதிவிட்டேன்.)


டிஸ்கி 1 : அடுத்த 2 வாரத்திற்கு ஏதும் பதிவு எழுத முடியும் என்று தோன்றவில்லை, முடிந்தால் எழுதுகிறேன். அவ்வப்போது வந்து உங்கள் பதிவுகள் படித்து பின்னூட்டம் இடுகிறேன். ஆனால் கும்மியடிக்க முடியுமா தெரியவில்லை. பொறுத்துக் கொள்ளவும்.

டிஸ்கி 2 : எனது உடல் நலத்தை அக்கறையோடு விசாரித்த பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள்.
September 05, 2010

என் ஆசான்கள். ஆசிரியர் தினப் பகிர்வு..


முஸ்கி : பதிவுலகம் அறிமுகமான பின் நான் கொண்டாடும் ஆசிரியர் தினம் இன்று. கலாநேசன் அவர்களின் பதிவிற்கு மதிப்பளித்து,  நான் போற்றும் என் குருநாதர்களை பற்றிய பதிவு இது...

பார்த்த சாரதி : என்னோட ஒன்னாப்பு வாத்தியார்..., ஆசிரிய வர்க்கத்துக்கு இன்றும் நான் முன்னோடியாய் நினைக்கும் ஒரு உன்னதமான மனிதர்...., என் கிராமத்தில், 5 வயது குழந்தைகளை... கணக்கெடுத்து... பெற்றோரிடம்.. சண்டை போட்டாவது... பள்ளிக்கு அழைத்துச் சென்று.... அடிப்படைக் கல்வியை... ஊட்டிய பகலவன்...., என் கல்யாணத்தின் போது என் தந்தையின் இழப்பை, சரி செய்ய முயன்ற உன்னதமான மனிதர்...நான் என் மனைவியுடன்...தாலிகட்டிய மறுகணம்..இவர் காலில் விழுந்துதான் ஆசீர்வாதம் வாங்கினேன்..., கண்களில் நீர் பொங்க என்னை வாழ்த்தியவர்...

சீத்தாராம் வாத்தியார் : நாலாப்பு மறுபயும்..படிக்கச் சென்ற போது ஆரத்தழுவி...உற்சாகப் படுத்திய மனிதர்...ஆங்கிலத்தின் ஆரம்பத்தை என்னுள் விதைத்தவர்...., பின்னாளில் நல்லாசிரியர் விருதை அப்துல் கலாமிடம் பெற்ற போது.. என்னிடம் உற்சாகத்துடன் சொல்லி மாய்ந்த மனிதர்...

பேச்சியம்மா டீச்சர் :  ஆறாப்பு படிக்கும்போது..., அறிவுப் பூர்வமாக பாடம் நடத்தவில்லை என்று, என் நினைப்பில் இருந்தாலும்..இவரின் தாயுள்ளம் பெரியது..., எங்களிடம் காட்டும் இவரின் அன்பும் பாசமும்...தாயின் அன்பு பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது...

சீனிவாசன் : ஏழாப்பு வாத்தியார்..., சம்பளம் வாங்கும் தொழிலாக கருதாமல்... எங்களுக்கு அறிவூட்டுவதில் பெரும் சிரமப் பட்டவர்..., விபத்தில் ஒரு கால் இழந்து வீட்டோடு இருக்கும் இவரை பார்க்கச் சென்ற போது.. வலி மறந்து..., உற்சாகமுடன் அலவலாவிய உன்னத மனிதர்....

ராஜேந்திரன், ராதாகிருஷ்னன், சுந்தர்: பள்ளிக் கல்வியை விளையட்டாக..அதன் நோக்கம் புரியாமல், விளயாட ஒரு இடம் என்று மனதில் இருந்ததை மாற்றி, கல்வியின் அருமையை..., பாடத்தின் கடுமையை.., எளிமயாக சொல்லிக் கொடுத்து, இவ்வளவுதானா..என்று என்னையும் படிப்பின் பால் அக்கறை கொள்ளச் செய்த மும்மூர்த்திகள். 
  
      ராஜேந்திரன் : ஆங்கிலம்+வரலாறு&புவியியல் அசிரியர், இன்றும் இவர் அளவுக்கு உலக வரலாறை என்னுள் , வேரெவரின் தாக்கமும் பாதித்ததில்லை.
     ராதாகிருஷ்னன் : அறிவியல் வாத்தியார். என் அறிவியல் தாக்கம் இவரிடம் இருந்துதான் தொடங்கியது..., எதையும்..., செயல் முறை விளக்கம் கொடுத்து..நாங்கள் புரிந்து கொண்டோமா என்பதில் அதிக அக்கறை செலுத்தியவர்...
    சுந்தர் : கணக்குப் பாடத்தை..சூ...இவ்வளவுதானா என்று எண்ண வைத்தவர்..., கணக்கில் நூத்துக்கு நூறு எடுப்பது எருமைமாடு மேய்ப்பதை விட சுலபமானது என்ற எண்ணத்தை தோற்றுவித்த மகான்.

அரங்கசாமி : பத்தாவது தமிழ் வாத்தியார். தமிழை முறையாகக் கற்றுக் கொடுத்தவர் (நான் சரியாகக் கற்றுக் கொண்டேனா என்பது வேறு விசயம்...). பள்ளி வயதில் இவரைக் கிண்டலடித்ததை பின்னாளில்.. இவரிடம் மன்னிப்புக் கேட்டதுண்டு. அதை ஒரு பொருட்டாகக் கொள்ளாமல் என்னை அரவனைத்த அவரின் பாசம் மறக்க முடியாதது...

பூங்கோதை : +1&+2  வேதியல் பாடத்தை ரொம்ப சிரமேற்கொண்டு எனக்கு புரிய வைக்க முயன்றவர்...,  வகுப்பில் மொத்த மதிபெண்ணில் முதல் மாணவனாக வந்தாலும்..அவர் பாடத்தில் என் மதிப்பெண் குறைவு என்ற ஆதங்கம் இவருக்கு உண்டு...,  போன வருடம் பள்ளியில் சென்று சந்தித்த போது... அவர் கொண்டு வந்த மதிய உணவை, என்னை வற்புறுத்திச் சாப்பிடவைத்து மகிழ்ந்த மற்றொரு தாய்க்குச் சமமானவர்.

ஆமருவியப்பன் :  +1&+2 கணக்கு வாத்தியார், கணக்குப் பாடத்தில் நான் அதிக மார்க் வாங்குவதால், என்னிடம் தனிப் பிரியம் வைத்தவர்..., எளிமையாகப் பாடத்தை புரிய வைப்பதில் வல்லவர். கல்லூரிப் படிப்பு முடிந்து, இப்போது சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று, வீடு தேடிப் போய் சொன்ன போது அளவிலா ஆனந்தம் அடைந்தவர்...

தனபால் : +1&+2 இயற்பியல் வாத்தியார், இந்தப் பாடத்தை என் விருப்பப் பாடமாக கல்லூரியில் தேர்ந்தெடுக்க காரணமானவர்..., பட்டிக்காட்டிலிருந்து சென்னை வந்து படிக்க வந்ததால் என்னிடம் தனி பிரியம் உண்டு..., ஆசிரியத்தொழிலை நிரம்ப நேசிப்பவர்.

போத்திராஜ் : இயற்பியல் துறைத் தலைவர். என் கல்லூரி வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர். கல்லூரிப் பாடத் திட்டங்கலை தாண்டி நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பல விசயங்களை, அக்கறையுடன் சொல்ல முயன்றவர். என் கல்லூரி வாழ்க்கையில் ஒட்டு மொத்த ஆசிரியர்களில் மாணவர்களின் மேல் அதிக அக்கறை கொண்ட மாமனிதர் இவர்.

சுவாமிநாத ஐயர் : நான் ஐஐடி- மேல் படிப்புக்கான நுழைவுத்தேர்வில் தோற்றவுடன், என்னுடைய அடுத்த இலக்கான சிஏ படிப்பிற்காக, இவரிடம் தான் பயிற்சிக்காக சேர்ந்தேன். என்னுடைய நண்பனாய், குருவாய், எனக்கு உலகத்தை பற்றிக் கற்றுக் கொடுத்தவர். இவரிடம் தான், நான் ஆங்கிலத்தை அதிகமாகக் கற்றேன். கம்பனி..ஆடிட்டிங்..தொழில்..வர்த்தகம்...பங்கு மார்கெட் என்ற அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தவர்... பார்ப்பனர்பால் என்னுள் இருந்த கோபதாபங்களை, தவிடு பொடியாக்கியவர், சாதி மத பேதம் எனக்கில்லை என்று என்னையும் மதித்து நிரூபிக்க முயன்றவர்...

நான் இங்கே குறிப்பிடாத பல ஆசிரியர்கள் உண்டு , என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுல், மேலே சொன்ன இவர்கள் முக்கியமானவர்கள்.

விவசாயத்திற்கு அடுத்ததாக, மற்ற எல்லா தொழிலைக் காட்டிலும் ஆசிரியர்த் தொழில் உன்னதமானது என்பது என் தாழ்மையானக் கருத்து.

இன்று, சிலபல இடங்களில் இது பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிப் போன அவலம் நடந்து கொடிருந்தாலும்...,  ஆசிரியத் தொழிலை உன்னதமானதாக பாவிக்கும் மனித மகான்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... அவர்களை... ஆசிரியர் தினமான... இன்று கொண்டாடுவோம்..
September 04, 2010

105 நாட் அவுட்...

முஸ்கி : என்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 100ஐக் கடந்ததால், நூறுக்கென்று ஒரு சிறப்பு நடைமுறையில் இருப்பதால், அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த பதிவு.....

இந்த பதிவுலகம் அறிமுகமாகி நான்கு மாதங்கள் கடந்து விட்டது. முதல் பதிவு எழுதி இன்றோடு 75 (இதுக்கு என்ன விழாப்பா!!!, வெள்ளியா?, தங்கமா?, பவளமா?...) நாட்கள் ஆகப்போகிறது....

அறிமுகமான ஆரம்ப காலத்தை விட இன்று பதிவுலகம் பற்றிய புரிதல்கள் சற்று கூடியிருக்கிறது.

நண்பர்கள் வட்டம் பெருகி இருக்கிறது. சில நண்பர்கள் பதிவுலகம் தாண்டி நெருக்கமாகி இருக்கிறார்கள். தொலைபேசியிலும், நேரிலும் நட்பு தொடர்கிறது.

அடுத்தவர்கள் எழுத்தை ரசித்து, சிரித்து, சிந்தித்து, வியப்படைந்து, பிரமிக்கும் தருணங்கள் என் வாழ்வில் இன்றும் தொடரும் நேரத்தில்,  என் எழுத்தும்!!!, எழுத்து நடையும்!!! பிடித்துப்போய்!!! என் ப்லாக்கை பின்தொடரும் நண்பர்களின் எண்ணிக்கை 100 தாண்டி விட்டது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் மனதின் விருப்பத்திற்கு சில பதிவுகள் எழுதினாலும், மற்றவர்களிடம் பாராட்டுபெருவதற்காக எழுதவில்ல என்று சில சமயம் வெளியில் சொல்லிக் கொண்டாலும், நாம் எழுதுவதை பலர் படிக்கிறார்கள் என்று அறியும்போது , பாராட்டி/திட்டி/கும்மி அடித்து பின்னூட்டம் இடும் போது, நம் வலை பக்கத்தை  பதிவர்கள்/வாசக சகோதரர்கள் தொடரும் போது... மனதிற்குள் ஒரு உற்சாகமும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடுவதை மறுக்க முடியாது.

தமிழில் எழுதும் வழக்கம் மற்றும் தேவை பதினைந்து வருடங்களுக்கு மேலாக இல்லாமல் இருந்ததால், எழுத்துப் பிழைகளும்...,   ர,ற, ந,ன,ண, ல,ல,ள போன்ற எழுத்துக்களை சரியான இடத்தில் கையாலுதலில் தவறும் நேரிடுகிறது...., அதற்கு தமிழ்த் தாயிடமும், என் எழுத்தை படிக்கும் வாசக நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

பின் தொடர்பவர்களுக்கு நன்றி சொல்லும் , இந்த பதிவை முடிந்தவரை உரைநடைத் தமிழில் எழுதுகிறேன்.


டிஸ்கி 1 : நண்பர்கள் வழக்கம் போல் (சொன்னா அப்படியே கேட்ருவாய்ங்க @$#%&*$%##.....) பின்னூட்டத்தில் பாராட்டி , திட்டி, கும்மியடிக்கலாம் என்று அனுமதி???!!! அளிக்கிறேன்!!!.


பின்தொடர்பவர்கள்September 01, 2010

கிராமத்துக் கல்யாணம் + மொய்முஸ்கி : பதிவு சின்னது மக்களே சந்தோசமாப் படிங்க..., தலைப்புதான் என்ன வைக்கிரதுன்னு கொஞ்சம் குழம்பி இப்படி வச்சிருக்கேன்.

     ஆடி முடிஞ்சி கல்யாண கலைகட்டிருச்சி, ஊர்லேர்ந்து தினத்துக்கும் உறவுக்காரங்க, கூட்டாளிக வீட்டு கல்யாண பத்திரிக வந்துட்டிருக்கு. ஆஃபீஸ், வேலை, குழந்தைக ஸ்கூல்னு, அவசியம் போயாகனும்னு தோனுற கல்யாணத்துக்கு கூட போக முடியாம போகுது. சிலவங்க புரிஞ்சிகிட்டு, சரி நீயென்ன பண்னுவே, அடுத்த விசேசத்துக்கு வந்து சேந்துருன்றாங்க, சிலவங்க கோச்சிக்கிராங்க..., ம்ம்ஹூம்...பட்டணத்து பணம்தேடுர வாழ்க்க ஊர்ல இருக்கிற உறவுக, ஃபிரண்ட்சுக கிட்டேர்ந்து ரொம்பதான் அன்னியமாக்கிட்டிருக்கு..., 

     வருசத்துக்கு ஒருக்கா மாசி மாசத்துல நடக்குற ஊர்ப்பொங்களும் (பொழப்ப பாக்க நாலாபுரமும் போன ஊர் உறவுக பெரும்பாலும் வந்துருவாங்க),   ஒட்டு மொத்த பங்காளிகளும் ஒன்னா கூடுற குலதெய்வம் வழிபாடும்(மகா சிவராத்திரி அன்னிக்கி), இல்லைனா, வாழ்க்கைல எல்லா சனத்தையும் ஒன்னா பாக்குற பாக்கியம் இல்லாமையே போயிருக்குமோன்ற சந்தேகம் கூட வருது..., அன்னிக்கி நாம் கூடி குலாவி பட்டுக்கிற சந்தோசம் அடுத்த வருசம் வரைக்குமான டானிக் மாதிரி, அனுபவிச்சவங்களுக்கு புரியும்.

     சரி தலைப்புக்கு வருவோம், சில வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆவணி மாசம் ஒரு கல்யாணத்துக்கு ஊருக்கு போயிருந்தே (விட்டுபோன கல்யாண வீடுக, இனி அடுத்து வரமுடியாத கல்யாண வீடுகன்னு அப்படியே தலைய காமிச்சி சொல்லிட்டு வரதுக்கும் சேத்துதான்). 

     அப்படியே என் அக்காவ கட்டிக்குடுத்த ஊருக்கு (பிரியமுடன் வசந்த்துன்னு ஒரு பிரபல பதிவர் இருக்காரே அவர் ஊர்...) ஒரு எட்டு போய் தலைய காமிச்சிட்டு திரும்பலாம்னு போயிருந்தேன். நைட் தூங்கி எழுந்தா வீடே பரபரப்பா இருந்துச்சி... அந்தூர்ல நாலு கல்யாணமாம், உள்ளூர்ல மூனு , பக்கத்து பெரியகுளத்துல ஒன்னு. உள்ளூர் கல்யாணத்த சமாளிச்சுடலாம், பெரியகுளத்துல நடக்குற கல்யாணத்துக்கு எப்படி போரதுன்னு, அக்காவும் மாமாவும் தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாங்க..., என்னை பாத்தவுடனே... டேய் தம்பீனு லைட்டா ஒரு இலுவை... 

     எனக்கு புரிஞ்சிருச்சி.., ம்ஹூம் என்னால முடியாது அவங்கள தெரியாதுனு எஸ் ஆகப்பாத்தேன்..., “உன்னை அவங்களுக்கு நல்லா தெரியும்டா, நீ டீவில பேசும்போது அவங்க பாத்தாங்க, நம்ம வீட்ல எல்லாரையும் அவங்களுக்குத் தெரியும்,  அதுவும் இல்லாம... இந்தூர்ல இருக்குற உன்னோட ஃபிரண்ட்சும் வருவாங்க..., போகலைனா வருத்தப்படுவாங்கடானு சொல்லி கிளப்பிருச்சி. 

     சரி வேற வழியில்ல, போகலைனா காலத்துக்கும் இத சொல்லிக் காமிக்கும்னு நானும் கிளம்பிட்டேன். கொஞ்சம் இருடானு சொல்லிட்டு, அக்காவும் மாமாவும் வீட்ல எதயோ மும்முரமா தேட ஆரம்பிச்சாக, கடைசில பரண்மேல இருக்கிற ஒரு நோட்டு, எதுக்குன்னு கேட்டா, அவங்க எவ்வளவு மொய் இவங்களுக்கு மொய் எழுதிருக்காங்கனு செக் பண்றாங்களாம்.

     விடுக்கா நன் பாத்துகுறேனு சொன்னா கேக்கலை, அப்புறம் ஏதோ கணக்கு போட்டு மாமா பேர்ல ரூ 50 மொய் எழுதிட்டு வந்துருன்னிச்சி, அது என்ன கணக்குனு கேட்டா, அதுக்கு மூனு வருசத்துக்கு முன்னாடி ரூ 25 மொய் எழுதினாங்களாம், இன்னிக்கு குறைஞ்ச மொய் ரூ50 ஆயிருச்சாம், அதனால் இந்த அமோண்டு. அதென்னக்கா, அப்படின்னா என்னை கல்யாணத்துக்கு போகச் சொல்லலையா, மொய் எழுதுரதுக்குதான் அனுப்புரியான்னு கேட்டா, உனக்கு அதெல்லாம் புரியாது சொல்றதமட்டும் செய், “உன் கல்யாணத்துக்கு மொய் வாங்கக் கூடாதுனு சொன்னே, என்னாச்சி , வந்த பாதிபேர், கல்யாணச் சாப்பாடு சாப்பிடாம திட்டிட்டு போனது தெரியும்ல”, பட்டணத்துக்கு போய் இங்க இருக்கிற நெறய நடைமுற உனக்குத் தெரியல, போடா சொல்ரத மட்டும் செய்னு சின்ன அதட்டல்.

     அங்க மண்டபத்துல ஒரு நாலு பேர் தெரிஞ்சவங்க இருந்தாங்க, சந்தோசமாகி அவங்ககூடயே இருக்கலாம்னு பாத்தா, பன்னாடைக, இரு மாப்ல, இரு பங்காளினு அங்க வந்த அவங்க உறவுக்காரக கிட்டே பேசப் போய்ட்டாங்க.... எனக்கு வேற யாரையும் தெரியாம யாரப் பாத்தலும் சின்னதா சிரிச்சிட்டு எப்படா கல்யாணம் முடியும் , போய் சாப்டிட்டு (மொய் எழுதப் போகும் போது கைல சாப்ட்ட வாசனை இல்லைனா மொய் வாங்குறதுக்கு முன்னாடி, சாப்டியானு 1008 எட்டு கேள்வி கேப்பாய்ங்க) மொய் எழுதிட்டா வீடு போய் சேரலாம்னு ஆயிருச்சி. அங்கிருந்த சிலபேர் , என் அக்கா பேர சொல்லி அவுக தம்பியானு குசலம் விசாரிச்சாக.... எனக்குதான் அவுக யாரன்னு தெரியல.

     ஒருவழியா மாம்ள கைல தாலிய எடுத்தவுடனே, அத பொண்ணு கழுத்துல கட்டுரதுக்கு முன்னாடி, வந்த பாதிகூட்டம் சாப்டுர எடத்துகு ஓடிச்சி..., நானும் ஜோதியில கலந்து சாப்டிட்டு, மொய் எழுதுர இடத்துக்கு போனா, அங்க ரெண்டு பேரு தனித் தனியா மொய் எழுதிட்டிருந்தாங்க. இப்பதான் எனக்கு என்னதா ஒரு டவுட்டு நாம வந்தது மாப்ள வீட்டு சார்பாவா, பொண்ணு வீட்டு சார்பாவானு, அக்காகிட்ட கேக்க மறந்துட்டேன்.

     சரின்னு ரெண்டு இடத்துலயும் ரூ 100 எழுதிட்டு, வெத்தலய வாங்கி அங்கிருந்த ஒரு பாட்டிகிட்ட சுண்ணாம்பு தடவித் தரச் சொல்லி போட்டுகிட்டு (எனக்கு சுண்ணாம்பு அளவு தெரியாது, ஒரு வாட்டி அதிகமா தடவி நாக்கு புண்ணப் போச்சி, அளவு கம்மியானா நாக்கு செவக்காது... வெத்தலை போட்ட திருப்தி இருக்காது...) வீடு வந்தேன்.

     என்னடா கல்யாணம் நல்லா நடந்ததா , மறக்காம மொய் எழுதிட்டியானு அக்கா கேட்டுச்சி. அப்பதான் நைசா ஆமா, நீ அனுப்புனது மாப்ல வீட்டு சர்பாவா பொண்ணுவீட்டு சார்பாவானு கேட்டேன், டேய் நான் பொண்ணு வீட்டுக்கு எழுதச் சொன்னேண்டா நீ யாருக்கு எழுதுனே (அப்பாடா, உளரிடுச்சி...). நல்ல வேலைக்கா பொண்ணு வீட்டுக்குதான் ரூ 50 எழுதுனேன்னு பொய் சொன்னேன்.

உண்மைய சொல்லிருந்தா, முட்டாப்பயனு ஒரு பட்டம், பணத்தோட அருமை தெரியலைடான்னு ஒரு வசவு விழுந்திருக்கும்... 

உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து  அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்.

பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.


டிஸ்கி : பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.LinkWithin

Related Posts with Thumbnails