முஸ்கி : பதிவு சின்னது மக்களே சந்தோசமாப் படிங்க..., தலைப்புதான் என்ன வைக்கிரதுன்னு கொஞ்சம் குழம்பி இப்படி வச்சிருக்கேன்.
வருசத்துக்கு ஒருக்கா மாசி மாசத்துல நடக்குற ஊர்ப்பொங்களும் (பொழப்ப பாக்க நாலாபுரமும் போன ஊர் உறவுக பெரும்பாலும் வந்துருவாங்க), ஒட்டு மொத்த பங்காளிகளும் ஒன்னா கூடுற குலதெய்வம் வழிபாடும்(மகா சிவராத்திரி அன்னிக்கி), இல்லைனா, வாழ்க்கைல எல்லா சனத்தையும் ஒன்னா பாக்குற பாக்கியம் இல்லாமையே போயிருக்குமோன்ற சந்தேகம் கூட வருது..., அன்னிக்கி நாம் கூடி குலாவி பட்டுக்கிற சந்தோசம் அடுத்த வருசம் வரைக்குமான டானிக் மாதிரி, அனுபவிச்சவங்களுக்கு புரியும்.
சரி தலைப்புக்கு வருவோம், சில வருசத்துக்கு முன்னாடி ஒரு ஆவணி மாசம் ஒரு கல்யாணத்துக்கு ஊருக்கு போயிருந்தே (விட்டுபோன கல்யாண வீடுக, இனி அடுத்து வரமுடியாத கல்யாண வீடுகன்னு அப்படியே தலைய காமிச்சி சொல்லிட்டு வரதுக்கும் சேத்துதான்).
அப்படியே என் அக்காவ கட்டிக்குடுத்த ஊருக்கு (பிரியமுடன் வசந்த்துன்னு ஒரு பிரபல பதிவர் இருக்காரே அவர் ஊர்...) ஒரு எட்டு போய் தலைய காமிச்சிட்டு திரும்பலாம்னு போயிருந்தேன். நைட் தூங்கி எழுந்தா வீடே பரபரப்பா இருந்துச்சி... அந்தூர்ல நாலு கல்யாணமாம், உள்ளூர்ல மூனு , பக்கத்து பெரியகுளத்துல ஒன்னு. உள்ளூர் கல்யாணத்த சமாளிச்சுடலாம், பெரியகுளத்துல நடக்குற கல்யாணத்துக்கு எப்படி போரதுன்னு, அக்காவும் மாமாவும் தீவிரமா டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தாங்க..., என்னை பாத்தவுடனே... டேய் தம்பீனு லைட்டா ஒரு இலுவை...
எனக்கு புரிஞ்சிருச்சி.., ம்ஹூம் என்னால முடியாது அவங்கள தெரியாதுனு எஸ் ஆகப்பாத்தேன்..., “உன்னை அவங்களுக்கு நல்லா தெரியும்டா, நீ டீவில பேசும்போது அவங்க பாத்தாங்க, நம்ம வீட்ல எல்லாரையும் அவங்களுக்குத் தெரியும், அதுவும் இல்லாம... இந்தூர்ல இருக்குற உன்னோட ஃபிரண்ட்சும் வருவாங்க..., போகலைனா வருத்தப்படுவாங்கடானு சொல்லி கிளப்பிருச்சி.
சரி வேற வழியில்ல, போகலைனா காலத்துக்கும் இத சொல்லிக் காமிக்கும்னு நானும் கிளம்பிட்டேன். கொஞ்சம் இருடானு சொல்லிட்டு, அக்காவும் மாமாவும் வீட்ல எதயோ மும்முரமா தேட ஆரம்பிச்சாக, கடைசில பரண்மேல இருக்கிற ஒரு நோட்டு, எதுக்குன்னு கேட்டா, அவங்க எவ்வளவு மொய் இவங்களுக்கு மொய் எழுதிருக்காங்கனு செக் பண்றாங்களாம்.
விடுக்கா நன் பாத்துகுறேனு சொன்னா கேக்கலை, அப்புறம் ஏதோ கணக்கு போட்டு மாமா பேர்ல ரூ 50 மொய் எழுதிட்டு வந்துருன்னிச்சி, அது என்ன கணக்குனு கேட்டா, அதுக்கு மூனு வருசத்துக்கு முன்னாடி ரூ 25 மொய் எழுதினாங்களாம், இன்னிக்கு குறைஞ்ச மொய் ரூ50 ஆயிருச்சாம், அதனால் இந்த அமோண்டு. அதென்னக்கா, அப்படின்னா என்னை கல்யாணத்துக்கு போகச் சொல்லலையா, மொய் எழுதுரதுக்குதான் அனுப்புரியான்னு கேட்டா, உனக்கு அதெல்லாம் புரியாது சொல்றதமட்டும் செய், “உன் கல்யாணத்துக்கு மொய் வாங்கக் கூடாதுனு சொன்னே, என்னாச்சி , வந்த பாதிபேர், கல்யாணச் சாப்பாடு சாப்பிடாம திட்டிட்டு போனது தெரியும்ல”, பட்டணத்துக்கு போய் இங்க இருக்கிற நெறய நடைமுற உனக்குத் தெரியல, போடா சொல்ரத மட்டும் செய்னு சின்ன அதட்டல்.
அங்க மண்டபத்துல ஒரு நாலு பேர் தெரிஞ்சவங்க இருந்தாங்க, சந்தோசமாகி அவங்ககூடயே இருக்கலாம்னு பாத்தா, பன்னாடைக, இரு மாப்ல, இரு பங்காளினு அங்க வந்த அவங்க உறவுக்காரக கிட்டே பேசப் போய்ட்டாங்க.... எனக்கு வேற யாரையும் தெரியாம யாரப் பாத்தலும் சின்னதா சிரிச்சிட்டு எப்படா கல்யாணம் முடியும் , போய் சாப்டிட்டு (மொய் எழுதப் போகும் போது கைல சாப்ட்ட வாசனை இல்லைனா மொய் வாங்குறதுக்கு முன்னாடி, சாப்டியானு 1008 எட்டு கேள்வி கேப்பாய்ங்க) மொய் எழுதிட்டா வீடு போய் சேரலாம்னு ஆயிருச்சி. அங்கிருந்த சிலபேர் , என் அக்கா பேர சொல்லி அவுக தம்பியானு குசலம் விசாரிச்சாக.... எனக்குதான் அவுக யாரன்னு தெரியல.
ஒருவழியா மாம்ள கைல தாலிய எடுத்தவுடனே, அத பொண்ணு கழுத்துல கட்டுரதுக்கு முன்னாடி, வந்த பாதிகூட்டம் சாப்டுர எடத்துகு ஓடிச்சி..., நானும் ஜோதியில கலந்து சாப்டிட்டு, மொய் எழுதுர இடத்துக்கு போனா, அங்க ரெண்டு பேரு தனித் தனியா மொய் எழுதிட்டிருந்தாங்க. இப்பதான் எனக்கு என்னதா ஒரு டவுட்டு நாம வந்தது மாப்ள வீட்டு சார்பாவா, பொண்ணு வீட்டு சார்பாவானு, அக்காகிட்ட கேக்க மறந்துட்டேன்.
சரின்னு ரெண்டு இடத்துலயும் ரூ 100 எழுதிட்டு, வெத்தலய வாங்கி அங்கிருந்த ஒரு பாட்டிகிட்ட சுண்ணாம்பு தடவித் தரச் சொல்லி போட்டுகிட்டு (எனக்கு சுண்ணாம்பு அளவு தெரியாது, ஒரு வாட்டி அதிகமா தடவி நாக்கு புண்ணப் போச்சி, அளவு கம்மியானா நாக்கு செவக்காது... வெத்தலை போட்ட திருப்தி இருக்காது...) வீடு வந்தேன்.
என்னடா கல்யாணம் நல்லா நடந்ததா , மறக்காம மொய் எழுதிட்டியானு அக்கா கேட்டுச்சி. அப்பதான் நைசா ஆமா, நீ அனுப்புனது மாப்ல வீட்டு சர்பாவா பொண்ணுவீட்டு சார்பாவானு கேட்டேன், டேய் நான் பொண்ணு வீட்டுக்கு எழுதச் சொன்னேண்டா நீ யாருக்கு எழுதுனே (அப்பாடா, உளரிடுச்சி...). நல்ல வேலைக்கா பொண்ணு வீட்டுக்குதான் ரூ 50 எழுதுனேன்னு பொய் சொன்னேன்.
உண்மைய சொல்லிருந்தா, முட்டாப்பயனு ஒரு பட்டம், பணத்தோட அருமை தெரியலைடான்னு ஒரு வசவு விழுந்திருக்கும்...
உறவுப் பாசமும் இருக்கு, பணத்துல கணக்கும் இருக்கு... எப்படியோ இந்த கிராமத்து அன்யோன்யம் பட்டணத்து தாக்கம் அதிகமாகி... அழியாம இருந்தாச் சரித்தேன்.
பட்டணத்துல நாம பிரசண்டேசன் என்ற பேர்ல ஆயிரம் , ஐயாயிரம்னு கல்யாணத்துக்கு செலவு செய்றோம். எனக்கென்னமோ இங்க பாசத்தை விட பகட்டு கொஞ்சம் கூட இருக்குறா மாதிரி ஒரு ஃபீலிங்கு.
டிஸ்கி : பதிவு சின்னதா போட்டதுக்கு, பின்னூட்டமும் போடுங்க, இல்லினா அடுத்த பதிவு அஞ்சு பக்கத்து எழுதுவேன்.