கீர்த்திகா ஒரு வாரக் குழந்தயாக இருக்கும் போது எடுத்த படம்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்த ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்ததால், அவரின் பிறந்த தினமான நவம்பர் 14 ம் தேதி, நம் நாட்டில் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகளும் நேருவின் மீது பற்று வைத்திருந்ததால். குழந்தைகளால் அவர் நேரு மாமா என செல்லமாக அழைக்கப்பட்டார்.
பண்டிட் ஜவஹர்லால் நேரு 1889ம் ஆண்டு உ.பி.,யிலுள்ள அலகாபாத்தில் பிறந்து, பிறகு இங்கிலாந்தில் உயர் கல்வியை முடித்தவர். நேருவின் ஆட்சியில் இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் தொழிற்நுட்ப கல்லூரிகளும்( IIT, IIM etc..), எய்ம்ஸ் போன்ற சர்வதேச தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் துவக்கப் பட்டிருக்கின்றன.
சிறு வயது முதலே அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களாகிய நமக்கும் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறையவே உண்டு. முக்கியமாக பிறருக்கு உதவும் பண்பு, அன்பு செலுத்துதல், சகிப்புத்தனமை மற்றும் பொறுமை போன்ற நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டியது கடமையாகிறது.
ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தை ஒரு சம்பிரதாய நிகழ்வாகக் கொள்ளாமல், நம் குழந்தைகளின் கடந்த வருட செயல்பாடுகளை கொஞ்சம் அசைபோட்டு, அடுத்த வரும் ஆண்டில் நாம் அவர்களுக்கு எடுத்துரைக்கப்போகும் அல்லது செய்யவேண்டியன போன்றவற்றைப் பற்றி சிறிது சிந்திக்கும் நாளாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்தக் குழந்தைகள் தினத்தின் ஒரு பகுதியாக ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு நம் தகுத்திக்கேற்ற உதவிகளை நம் குழந்தைகளைக் கொண்டே வழங்கச் செய்யலாம். குறைந்த பட்சம், நம் குழந்தைகள் பயன் படுத்திய பழையதுணிகள், வளர்ந்துவிட்டதால் பயன்படுத்த முடியாமல் போகும் துணிகள் கூட இந்த இல்லங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரும் உதவியாக உள்ளதால் நாம் அதை தானம் குடுக்கலாம்.
கல்வி , உழுக்கம் சார்ந்த விசயங்களில் நாம் அவர்களுக்கு துணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்து கொண்டு எதிர்கால துறை சார்ந்த விசயங்களில் அவர்கள் விருப்பத்திற்கு தடைபோடாமல், நம் எண்ணங்களை அவர்களின் மேல் கட்டாயத் திணிப்பாக மாற்றாமல், ஒரு நண்பனின் இடத்தில் இருந்து ஆலோசனை சொல்லும் முகமாக நாம் மாறிக்கொள்வோம்.
கீர்த்திகா
குழந்தகள் இல்லாதவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் தத்தெடுத்து வளர்க்கலாம்.
குழந்தைகள் வாழும் வீடு, தெய்வங்களும் தேவதைகளும் வாழும் வீடு.
இங்கே பகிரப்பட்ட படங்கள் எங்கள் செல்ல மகள் கீர்த்திகாவின் படங்கள்.
