காதலை ஊக்குவிப்பதற்கு முன் காதலை ஏற்பதற்கு ஏற்ற மனநிலையை,
ஒரு சமூகச் சூழலை, இந்த சாதிய கட்டமைப்புகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் இந்த
சமூகத்திற்கு சொல்லித்தர வேண்டியது அல்லது அதனை தயார் செய்வதுதான் முதல் வேலையாக
இருக்க வேண்டும் போல தெரிகிறது.
சாதி ஒழிப்பென்பது பார்ப்பனீயத்தை ஒழித்தால் மட்டுமே
சரியாகிவிடும் என்பது போன்ற ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமே தமிழகத்தின்
திராவிட இயக்கங்கள் செய்த சாதனையாக
தெரிகிறது.
இத்துனை வருடங்களாக, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த
பட்ட, தாழ்த்தபட்ட என்ற வரையறைக்குள் சாதிகளை அடக்கி வெளிப்பேச்சில் மேடைகளில்
சாதிக்கி எதிராக பேசிக்கொண்டும், செயல் பாடுகளில் சாதிகளின் வீரியம்
குறைந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டும், எந்த சாதி மக்கள் அதிகம்
இருக்கிறார்களோ அந்த சாதி பார்த்து தேர்தல் சீட்டு வழங்கியும், அல்லது
பெரும்பான்மை எண்ணிக்கை மக்கள் இருக்கும் சாதிச் சங்க தலைவர்களுக்கு உரிய மரியாதை
அளித்து அவர்களுடன் அரசியல் உடன்பாடுகள் செய்துகொண்டும், உண்மையில் சாதியை அரசியல்
அதிகாரம் என்ற போதைக்காக வளர்த்துக் கொண்டிருந்ததுதான் திராவிட அரசியலின் சாதனையாக
தோன்றுகிறது.
பார்ப்பனீய எதிர்ப்பு என்ற ஒற்றைச் சொல்லால் மற்ற சமுதாய
சாதி ஏற்றதாழ்வுகள் மறக்கடிக்கபட்டது என்பதே கண்கூடு.
சாதிய துவேஷத்தை வேண்டுமானால் நான்கு தற்குறிகளால் ஒரிரவில்
பற்ற வைத்துவிடமுடியும், ஆனால் சாதிய ஒழிப்பிற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூகத்
தலைவர்களிடமிருந்து நேர்மையான தன்னலமற்ற அனுகுமுறைகள் தேவை தொடர்ச்சியாக ஒரு
தலைமுறைக்கேனும் தேவை, அதை இன்றைய ஓட்டு வங்கி அரசியலில் சாத்தியமாகப் படவில்லை.
இன்றைய சம்பவம் போன்ற நிகழ்வுகள், அதன் எதிரொலியாக
உணர்ச்சிபூர்வமாக எழுப்பப்படும் கண்டணங்களால் ஏதும் பலன் இருக்குமா தெரியவில்லை.
பமக,விசிகே,கொமுக,புத இன்னபிற சாதீய கட்சிகள் அனைத்தும்
முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும். மாறாக இது போன்ற சம்பவங்கள் அவரவர் சாதி
மக்களை ஒன்றினைத்து, அவர்களது சாதி சார்ந்த அமைப்புகளுக்கு அதிக பலத்தை
தந்துவிடுகிறது.
ஒரு பார்ப்பண வீட்டுக்குள் செல்ல அல்லது அவர்களுடன் திருமண
சம்பந்தம் வைத்துக்கொள்ள ஏனைய சாதிகள் எப்படி மறுக்கப்படுகிறதோ அதே போல் பிற்படுத்தப்பட்ட
சாதிகள் தாழ்த்தப்பட்ட சாதிகளை தள்ளிவத்திருப்பதும், ஏன் தாழ்த்தப்பட்ட
சாதிகளுக்குள்ளேயே ஒரு தேவேந்திரகுல வெள்ளால சமூக அதே தாழ்த்தப்பட்ட பிரிவுக்குள்
இருக்கும் ஒரு சக்கிலிய சமுதாயத்தை தன்னிலிருந்து ஒதுக்கியே வைத்திருக்கிறது.
இதுதான் இன்றைய சமூகத்தில் நடைமுரை யதார்தத்தில் இருக்கும் நிதர்சனமான உண்மை.
ஆனால் பார்ப்பனீயத்தை எதிப்பதோடு நின்றுவிடுகிறது
பகுத்தறிவு,. அல்லது பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட சமூகத்திற்கிடையே
இருக்கும் வேறுபாடுகளை குறைகூறுவதோடு நின்றுவிடுகிறது சமூகப்புரட்சி, தழ்ழ்த்தப்பட்ட
பிரிவுகளுக்குள் உள்ள சாதீயம் பற்றி பெரிதாக எங்கும் பேசப்பட்டதாக தெரியவில்லை.
சாதீய தீண்டாமை அல்லது ஒரு பிரிவு மற்ற பிரிவு மக்களை இழிவாக நடத்தப்படும் கொடுமை
சங்கிலிதொடர்போல் ஐயர் அயங்காரிலிருந்து கடைநிலையாக கருதப்படும் தாழ்த்தபட்ட
சீர்மரபினர் வரை சாதீயம் வேரூன்றி இருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
கல்வி பொருளாதாரம் போன்றவற்றில் சமத்துவம் ஏற்பட்டால் பாதி அளவுக்கான
பிரச்சினை தீரும் என்று தோன்றுகிறது. இன்றைய சீழ் பிடித்த சமுதாயச் சூழலை
சரியாக்காமல், அவங்க சாதியைச் சார்ந்த பொண்ணுகளை இழுத்துவச்சி தாலியை கட்டுங்கடா
என்றும், அவங்க சாதிபசங்க நம்ம சாதி பெண்ணை காதலிச்சா கழுத்தை வெட்டுங்கடா என்றும்
கூறிக் கொண்டிருக்கும் சமுதாய தலைவர்களை கொண்டிருக்கும் வரை சாதி பார்க்காமல்
மனதால் ஈர்க்கபட்டு செய்யப்படும் தூய காதல் கூட வெற்றிபெறப்போவதில்லை.