Showing posts with label நண்பனின் மறைவு. Show all posts
Showing posts with label நண்பனின் மறைவு. Show all posts

September 21, 2010

சிறிய இடைவெளிக்குப் பின்...

இரண்டு வாரமாக வலைப்பக்கம் வரமுடியாத நிலை. கடந்த 5 ந்தேதி மெதுவாக எட்டிப் பார்த்த ஜூரம் அடுத்து வந்த நாட்களில், டைய்பாய்டில் கொண்டு விட்டது. எதை சாப்பிட்டாலும் கசப்பு, எருமைமாடுகளுக்கு கொடுப்பது போல் எவ்வளவு பெரிய மாத்திரைகள். பதிவுலககமே நாம் எங்கே என்று தேடி??? மாய்ந்துபோனது???!!!! (ஜூரம் அதனால 1 வாரம் கழித்து வரேனு மெயில் அனுப்புனா, அங்கயும் கும்மியடிச்சி, கொலையா கொல்றானுக...நாதாரிக, மொள்ளமாரிங்க, முடுச்சவிக்கிக...).

சரி ஜுரம் சரியாகிடுச்சி ஒரு பதிவு போடலாம்னா, 2 வாரமா ஆஃபீஸ் போகாததால, தோட்டத்துல களை முளைச்சிருக்குறா மாதிரி அஃபீஸ்ல ஆணி பெருகி நிக்குது. இந்தமாசம், இன்கம்டாக்ஸ் + ROC க்கு, கம்பனி அக்கவுண்ட்ஸ் ஃபைல் பண்ணனும் அதுவேற. அதனால அடுத்த ரெண்டுவாரத்துக்கு பதிவு ஏதும் எழுதமுடியுமானு தெரியலை (ங்கொய்யாலே எப்ப நீ பதிவெழுதுவேனு, நாலு பேர் காத்திட்டு இருக்குறாமாறியே பில்டப்பு).

கடந்த வாரங்களில் என் மனதுக்கு சந்தோசமான + மிகவும் துக்ககரமான நிகழ்வுகள் என் வாழ்வில்.

சந்தோசமான நிகழ்வுகள் :  

1.    என் பொண்ணு பள்ளியில் (L K G), கதை சொல்லுவதிலும்( story telling with action), ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டியிலும் ( character from Ramayana. we have chosen, sita for her) முதலாவதாக வந்தது. 3 வாரப் பரபரப்பான preparation ஒரு வழியாக முடிந்தது. எந்த கேரக்டர் தேர்ந்தெடுப்பது, அதற்கான வசனங்கள், பொறுத்தமான உடைகள் மற்றும் மேக்கப், சார்ட் பேப்பர், மற்றும் பெயிண்ட்+பிரஸ் வாங்கி வந்து தீ மாதிரியான வரைபடம் வரைதல் என்று அதற்காக ஒருவாரம்,  வீட்டம்மா என்னையும் பெண்டு நிமிர்த்தியாகிவிட்டது. இருந்தாலும் குழந்தக்காக கஷ்டப்படுவதில்??? ஒரு சுகம். அதுவும் முடிவில் போட்டியில் முதலாவதாக வந்தால் ரெட்டிப்பு சந்தோசம்.





2. எனது ”சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு” பதிவு செப்டெம்பர் மாத, மல்லிகை மாத இதழில் வெளிவந்துள்ளது, எனக்கு ஒரு பிரதியை அனுப்பி இருந்தார்கள். முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ஒரு தமிழ்மாத இதலில் என்னுடையப் பெயர், மனதிற்குள் சின்ன சந்தோசம்.




சோகமான நிகழ்வு :-

  என் வாழ்வின் மிக நெருங்கிய தோழனின் மறைவு.  நினைவு தெரிந்து கிராமத்தில் ஒன்றாகவே சுற்றித்திருந்திரிந்திருக்கிறோம், பத்தாவது வரையிலும் ஒன்றாகவே படித்தோம், மீண்டும் கல்லூரி செல்லும் போது அதே கல்லூரியில் எனக்கு ஜுனியராக சேர்ந்தாலும் ஒன்றாகவே இருந்தோம். கல்லூரி படிப்பு முடிந்து அவன் விவசாயம் பார்க்க கிராமத்திலேயே இருந்துவிட்டான். நான் ஊர் செல்லும் போது கூடிப் பேசுவது என்றாகிவிட்ட காலங்கள். ஊரிலிருந்து போன், ஜெயராமன் இறந்துவிட்டான் என்று, மனதே ஸ்தம்பித்துபோய்விட்டது. என் தந்தையின் இழப்பின் போது மனதினுள் உணர்ந்த ஒரு வெற்றிடத்தை, மீண்டும் உணர்ந்தேன்.

காலையில் போன் மாலையில் எடுத்துவிடுவோம் என்று, உடனே கிளம்பினாலும் ஊர் போய் சேர இரவாகிவிடும், வீட்டிலும், இப்போதுதான், டைபாய்ட் ஜூரம் சரியாகிருக்கு, எப்படி இருந்தாலும் நேரத்திற்கு போய் சேரமுடியாது, 2 நாள் கழித்து செல்லுங்கள் , இல்லையென்றால் காரியத்திற்கு செல்லுங்கள் என்று (போனில் பதிவர் மங்குனியும் இதையே சொன்னான்). முடிவில் அவனது முகத்தை பார்க்கமுடியாமல் போய்விட்டது. பணம் தேடி கிராமத்தை விட்டு செல்பவர்களின் ஈடுகட்ட முடியாத துரங்களில் இதுமாதிரியானதும் ஒன்று.

பட்டணத்தில் இருந்திருந்தால், அவனின் உடல் நலத்தினை ( ஜூரம் ஆரம்பித்து அது நிமோனியா காய்ச்சல் என்று கண்டரியப்பட்டு, மதுரை அப்போலாவில் 10 நாள் சிகிச்சை பலனின்றி இறப்பு) சரி செய்திருக்கலாமோ என்ற எண்ணம். இன்னும் மருத்துவ ஆராய்ச்சிகள் கடக்கவேண்டிய தூரம் அதிகம் போலும். எனது மொத்த வாழ்நாளில் மறக்க முடியாத இழப்புகளில், இவனது மறைவும் ஒன்று.(இதை இங்கு எழுதலாமா வேண்டாம என்று மனதிற்குள் சிறு போராட்டம், முடிவில் உற்றவர்களிடம் பேசி பாரத்தை கொஞ்சம் இறக்கிவப்பதுபோன்ற உணர்வில் எழுதிவிட்டேன்.)


டிஸ்கி 1 : அடுத்த 2 வாரத்திற்கு ஏதும் பதிவு எழுத முடியும் என்று தோன்றவில்லை, முடிந்தால் எழுதுகிறேன். அவ்வப்போது வந்து உங்கள் பதிவுகள் படித்து பின்னூட்டம் இடுகிறேன். ஆனால் கும்மியடிக்க முடியுமா தெரியவில்லை. பொறுத்துக் கொள்ளவும்.

டிஸ்கி 2 : எனது உடல் நலத்தை அக்கறையோடு விசாரித்த பதிவுலக நண்பர்களுக்கு என் நன்றிகள்.




LinkWithin

Related Posts with Thumbnails