Showing posts with label ஆணாதிக்கம். பெண்ணீயம்.. Show all posts
Showing posts with label ஆணாதிக்கம். பெண்ணீயம்.. Show all posts

November 12, 2012

பெண்ணீயம் ஜெயித்து, ஆணாதிக்கம் ஒழிக்கப்பட்டது


கடந்த 5 வருடங்களாக தீபாவளி பண்டிகையின் போது வீட்டில் பட்டாசு வெடிப்பதில்லை, காரணம் என் செல்லகுட்டிக்கி பட்டாசு சத்தம் என்றால் ஆகாது , பயம் என்றும் சொல்லலாம். அவள் பிறந்த வருடத்தின் தீபாவளியை அதிக விமரிசையாக கொண்டாடும் ஆசையில் 1 மாதம் முன்பே சிவகாசியில் இருந்த நண்பர் மூலமாக அதிகமாகவே பட்டாசு வாங்கி வைத்தாகி விட்டாலும், எனது மச்சான் ஆர்வக்கோளாரால் லட்சுமி வெடியை வாசலில் வைத்து வெடிக்க, அந்த வெடி சத்ததிற்கு இணையாக உச்சஸ்தாயியில் எனது செல்லக்குட்டியின் அழுகுரலும் சேர்ந்துகொள்ள அதோடு பட்டாசு வெடிப்பது நிறுத்திவைக்கப்பட்டது.

இவள் அழுவாள் என்ற காரணத்தால் இவள் மேல் உள்ள பாசத்தால் பக்கத்து வீடுகளின் வாண்டுகள் கூட கொஞ்சம் தூரம் சென்றுதான் வெடிக்க ஆரம்பித்தார்கள்.

அதனால் கடந்த 5 வருட தீபாவளி புத்தாடை, அசைவ சாப்பாடு,இனிப்புகள் மற்று டி.வி. நிகழ்ச்சிகள் என்றுதான் இருந்தது.

இந்த வருடம் என் பையன் 3 1/2 வயது, போன வருட தீபாவளி வரையிலும் மத்தாப்பு மட்டுமே விரும்பியவன், இந்த வருடம் வெடிக்கும் வெடிகள் வேண்டும் என்று அடம், அவன்மேல் அதிகம் பாசம் வைத்திருக்கும் என் மச்சான் (பையனுக்கு தாய்மாமன்) பட்டாசு வாங்கி வந்து வெடிக்க பையனுக்கு வெடி சத்தம் கேட்டு ஆனந்தம்.

மறுபுறம் என் மகள் என்னிடம் வந்து புகார், வெடி வெடிப்பதை நிறுத்தச் சொல்லி. சாதாரணமாக தீபாவளி சமயத்தில் என் மகளின் கோரிக்கையாக, வீட்டின் கதவு, சன்னல் என்று எல்லாவற்றையும் இழுத்து சாத்திவிடுவது வாடிக்கை, வெடி சத்தத்த்தின் அளவை குறைபதற்காக.

ஓவ்வொரு ஆண்டும் பக்கத்து வீட்டு வாண்டுகளுக்கு வைக்கப்பட்ட நட்பு ரீதியிலான வேண்டுகோள், இந்த தடவை என் பையனிடம் வைத்தால், பட்டென்று நிராகரித்துவிட்டு வெடி வெடிக்க ஆரம்பித்து  வீட்டில் ரகளை.

வீட்டின் உறுப்பினர்களுக்குள் நடந்த பஞ்சாயத்தில் என் மகளுக்கு ஆதராவாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

வெடிவெடிக்க வேண்டுமானால் என் பையனும், மச்சானும் பக்கத்து தெரிவில் போய் வெடிக்க வேண்டும் அல்லது மொத்த வெடியும் தண்ணீரில் நனைக்கப்படும் என்று.

முடிவில் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டார்கள். என் பையந்தான் அவ்வப்போது உறுமுகிறான்..... அக்காவை அடிக்கடி முறைப்பதாக புகார் வருகிறது.

எப்படியோ என் வீட்டளவில் பெண்ணீயம் ஜெயித்து ஆணாதிக்கம் ஒழிக்கப்பட்டது இந்த தீபாவளியில்.





LinkWithin

Related Posts with Thumbnails