August 27, 2013

கிராமத்து விளையாட்டுகள்


*கிராமத்து விளையாட்டுகள்*

  தாம்பரம் இறங்குறவங்க எல்லாம் இறங்குங்க, சத்தம் கேட்டு விழித்து சுதாரிப்பானார் ராமசாமி. நீண்ட தூரம் பேருந்து பயணம் செய்வது தன் வாழ் நாளில் இது பத்து தடவைக்குள் இருக்கலாம். சன்னல் கண்ணாடியை ஒரு புறம் ஒதுக்கி தள்ளிவிட்டு வெளியே பார்த்தார், நன்றாக விடிந்துவிட்டிருந்தது, சூரியன் மேக மூட்டத்துக்குள் செங்கல்மங்கலாக தெரிந்தான்.

  கோவிந்தசாமி தன் பேத்திக்கு திருமணம் நிச்சயத்திருப்பதாகவும், திருமணத்திற்கு கண்டிப்பாக வரவேண்டும் என்றும் கடந்த மாதம் ஊர் வந்து அழைப்பிதல் குடுத்திருந்தான். பால்ய கால சினேகிதன், ஒன்றாக பத்தாவதுவரை கிராமத்து பள்ளியில் படித்தவன். ஓனான் பிடிப்பது, கம்மாக் கரையில் நண்டு பிடித்து சுட்டு சாப்பிடுவது, பம்பரம், கில்லி, கிளியிறக்கம், கபடி, சைக்கிள் டயர்/ரிம் உருட்டுவது, ஆடுபுலி ஆட்டம், தாயகட்டு, எறிபந்து, குழிபந்து, கிணற்றில் டைவ் அடித்து நீச்சல் அடிப்பது,  என்று வருடம் முழுவதும் ஏதாவது ஒரு விளயாட்டு என்று கூடவே சுற்றி திருந்த காலம் அது.

  கோவிந்தசாமி கல்வி, வேலை என்று கிராமத்தை விட்டு கிளம்பிவிட ராமசாமி பத்தாவதில் பெயில் ஆனவுடன் விவசாயம், ஆடு மாடுகள் என்று கிராமத்தோடு ஒன்றிவிட்டிருந்தார். கோவிந்தசாமி மாதம் ஒருமுறை என்று ஊர் வந்தவர், அடுத்து ஆறுமாதம், ஒருவருடம் என்ற இடைவெளியாகி... இறுதியாக பத்தாண்டுகளுக்கு முன் நாட்டாமை வீட்டு விசேசத்திற்கு வந்தவர், போனமாதம்தான் பேத்தியின் திருமண அழைப்பிதல் குடுக்க ஊர் வந்திருந்தார்.

  ராமசாமியும் ஊர் முழுவதும் அழைப்பிதல் குடுக்க கூடவே சுற்றினார். பால்ய கால நினைவுகள் துரத்த கம்மாக்கரை மேட்டில் உட்கார்ந்து மணிக்கணக்காக பேசினார்கள். கடந்த சில வருடங்களாகவே சக வயது நண்பர்கள் பலரின் மறைவுகளால் தனிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறோமோ என்று, மனதை கொஞ்சம் உலுக்கவே செய்திருந்தது.

  ”பெரியவரே வரேங்க பார்க்கலாம், இதில் முகவரி இருக்கு, நேரமிருந்தா வீட்டுக்கு வந்துட்டு போங்க, பக்கத்து சீட்டு இளைஞனின் வேண்டுகோளால் சுய நினைவிற்கு வந்தார் ராமசாமி. பக்கத்து ஊர் மாரிச்சாமியின் மகனாம். சின்ன வயதில் பார்த்தது, மாரிச்சாமியின் மறைவிற்கு பின் அவர் வீட்டின் பரிச்சயம் நின்றுபோனது. தேனியில் பஸ் ஏறும் போதே என்னை அடையாளம் கண்டு கொண்டு நலம் விசாரித்தவன். இப்போது சென்னையில் பெரிய வேலையில் இருப்பதாக சொன்னான். படிப்பு வராமல் வேறு வேலை தெரியாதவர்கள் மட்டுமே ஊர் தங்கி விவசாயம் பார்ப்பது என்றாகிவிட்டது. அதிலும் பலர், சித்தாள், கொத்தனார் என்று வெளியூர் , சவூதிஅரேபியா என்று சென்று விடுகிறார்கள்.

  போனதலைமுறை போல அல்லாமல் கிராமத்திலும் இப்போது படித்தால் சம்பாதித்து சுகமாக இருக்கலாம் போன்ற புரிதல்கள் ஆரம்பித்து, இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடின்றி எல்லாரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போக்கு அதிகரித்துவிட்டது. பள்ளி படிப்பிற்காக கடன் வாங்குவது கூட சகஜமாகிவிட்டது, அதனால் தானோ என்னவோ, பள்ளி முடிந்து வீடு வரும் குழந்தைகளை விளையாட விடாமல், படிப்பு படிப்பு என்று வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள், மீதி நேரம் டிவி பார்ப்பதில் கழிந்து, ஓடியாடி விளையாடுவது என்பது பட்டணம் போல் கிராமத்திலும் மிகவும் குறைந்துவிட்டது.

  ஊருக்கு வந்த கந்தசாமி, கிராமத்தில் விடலைகள் விளையாடுவது குரைந்திருப்பது கண்டு, ம்ம்ம், இங்கே விளையாடுறது குறைஞ்சிருக்கு, பட்டணத்தில இப்பதான் விளையாடுறது அதிகமாயிருக்கு, நாம விளையாண்ட அத்தனை விளையாட்டுகளும் இப்போது பட்டணத்தில் ரொம்ப பிரபலம் ஆகிவிட்டது தெரியுமா?, என் பையனுக்கு எல்லா விளையாட்டுகள், அதன் வரையறைகள்னு சொல்லி குடுத்து, இப்ப அவன் சூப்பரா விளையாடுறான் தெரியுமா? என்று சொல்லியிருந்தான். அப்பாடா பட்டணத்து குழந்தைகளாவது விளையாடி உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுகிறார்களே என்று ராமசாமி மனதில் எண்ணிகொண்டார்.

  பேருந்தின் சன்னல் வழியே பார்வையை ஓட்டினார். இன்று ஞாயிற்றுக் கிழமை, பள்ளிகளுக்கு விடுமுறை தினம். கோயம்பேடு போய் சேருவதற்குள் கிராமத்து விளையாட்டுகளை எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்த்துவிட ஆர்வம் அதிகமாகி, பார்வையை சன்னல் வழியே செலுத்தினார். பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஆங்காங்கே விளையாட்டு திடல்கள் ஒன்று இரண்டு தட்டுபட்டாலும், அதில் மிக சொற்பமான அளவில் சிலர் கிரிக்கெட் மட்டுமே விளையாடுவது தெரிந்தது. கில்லி, பம்பரம், கபடி, எறிபந்து என்று யாரும் விளையாடியதாக தெரியவில்லை.

  கந்தசாமி சொன்னானே, அவன் பொய் சொல்லுபவன் கிடையாதே?, ராமசாமியின் மனதில் பல்வேறு கேள்விகள். கோயம்பேடு பேருந்து நிலையம் இறங்கும் போது அழைத்துச் செல்ல கந்தசாமி காத்திருந்தார்.

  வீடு வந்து குளித்து முடித்து காலை உணவு முடிந்தது. அதற்கு மேல் ராமசாமியால் பொறுமை காக்க முடியாமல் கேட்டே விட்டார். “எலேய் கந்தா, ஏதோ பட்டணத்தில் பசங்க எல்லாம் விளையாடுறது அதிகமாகிடுச்சி, நம்மூர்ல நாம விளையாண்ட விளையாட்டெல்லாம் ரொம்ப ஆர்வமா விளையாட ஆரம்பிச்சிட்டாங்கனு சொன்னியே, பேருந்துல வந்த போது பார்த்தேன், கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் விளையாடி பார்க்கலையே?, என்று கேட்டுவிட்டார்.

  அட ராமசாமி உண்மைதான், வா காமிக்கிறேன் என்று வீட்டின் மூலையில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார், அறையில் கண்ட காட்சியை பார்த்து திகைத்துப் போய் நின்றார் ராமசாமி.

  ஆமாம் அந்த அறையில் கந்தசாமியின் 15 வயது பேரன், கம்யூட்டரில் கபடி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான். கந்தசாமி மேலும் சொன்னார், இங்கே மட்டும் இல்லை ராமசாமி, கிட்டதட்ட பட்டணத்தில இருக்கிற எல்லார் வீட்லயும் பசங்க நம்மூர் விளையாட்டுகளைத் தான் விளையாடுறாங்க...!



பி.கு : சின்னதா கதை ஒன்னு எழுதலாம் என்ற எண்ணத்தில், என் முதல் முயற்சி...


LinkWithin

Related Posts with Thumbnails